கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அக்மீமன தேரர் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.

குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட 7 பேருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.