வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மகளின் செயற்பாடு தொடர்பில் பெற்றோரிடம் முறையிட்ட நபரின் டிப்பர் வாகனத்தின் கீழ் நேற்று கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும்  தெரியவருவதாவது,

வவுனியா நொச்சிமோட்டை புதிய சின்னக்குளம் பகுதியில் ஒரு மாணவியும் மாணவனும் கதைத்துக்கொண்டிருந்ததை அவதானித்த நபரொருவர் குறித்த மாணவியின் வீட்டாரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து நேற்றையதினம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து குறித்த நபரின் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டினையும் சேதமாக்கி விட்டு அவரின் டிப்பர் வாகனத்தின் கீழ் கைக்குண்டொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுடன் இன்றையதினம் குறித்த கைக்குண்டை செயலிழக்கும் நடவடிக்கையினை ஓமந்தை பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.