முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது. 

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். 

இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.