தென்காசி அய்யாபுரம் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா திரளான பக்தர்கள் புடைசூழ அண்மையில் இடம்பெற்றது.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் சுமார் 6 ஆவது தலைமுறையாக இடம்பெற்றுவரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், மகன் பைரவருக்கும் கடந்த 24 வருடங்களாக நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, இம் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகியது.

முதல் நாளில் தீச்சட்டி ஊர்வலம் இடம்பெற்றது. இரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் புகழ்கரகாட்டம் நடைபெற்றது.

2 ஆவது நாள் காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்த முளைப்பாரி ஊர்வலமும், குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், இரவில் திருநெல்வேலி புகழ் சங்கராம்பாள் வில்லிசை கச்சேரியும் இடம்பெற்றது.

இரவு சரியாக 12 மணியளவில் 21 அடி நீளம் கொண்ட பூக்குழியில் பூவளர்த்து, அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதி அம்மன் ஆலயத்தில்வைத்து உலகின் அனைத்து தெய்வங்களையும் எழுந்தருளச்செய்து புதன் அதிகாலை 4.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் இடம்பெற்றது. விழாவைக்காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மூன்று (02, 03, 04) நாள் திருவிழா ஏற்பாடுகளை அய்யாபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதியம்மனுக்கு சித்திரைமாதத்திலும், 2 நாள் கொடையாக மகன் பைரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.