ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர் பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப்  உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார்.  

இம்மாதம் 23 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கி யிருக்கும்  ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப்   இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள்  எவ் வாறு இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் மதிப்பீடு செய்யவிருக்கின்றார். 

இந்த விஜயத்தின்போது  ஐ.நா.வின் விசேட நிபுணர் அரச உயர் அதிகாரிகள்   மாகாண மட்ட அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்,   நீதித்துறை   உறுப்பினர்கள்,  இராணுவ  தலைமை அதிகாரிகள், சட்டத்தை அமுலாக்கும்   நிறுவனங்களின் பிரதானிகள், மதத்தலைவர்கள்,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள், உள்ளிட்டபலரையும் சந்தித்து   பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார். 

இந்த விஜயத்தின்போது   ஐ.நா. விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப்   கொழும்பில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தவுள்ளதுடன் தெற்கிற்கும் மத்திய மாகாணத்திற்கும் வடக்கு, கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கை விஜயம் குறித்து கருத்து வெளியிட்டள்ள பப்புலோ டி கிரீப்  இலங்கையில் இதுவரை  மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே எனது விஜயம் அமைந்துள்ளது.   

பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் ஏற்படும் தடைகள் தொடர்பல்  நான் ஆராயவிருக்கின்றேன். அரசாங்கம் மற்றும்  சமூக  பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான   விசேட  நிபுணர்  பப்புலோ டி கிரீப் இலங்கை விஜயம் தொடர்பான இறுதி அறிக்கை  ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்  38 ஆவது   கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.