மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிரந்தரமாக தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை நியமிக்கும் விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் சொல்லை கேட்க முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் தெரிவித்திருந்தார்.

தாங்கள் தீர்மானித்துள்ள நபரையே அரசாங்க அதிபராக நியமிப்போம் என்றும் மீறி சண்டையிட்டால் பெரும்பான்தையினத்தவர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டிவரும் என்றும் நில் அல்விஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதி ஒருவரை அரசாங்க அதிபராகப் பெற்றுக்கொடுப்பதில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏன் தாமதம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனைப் பெற்றுக்கொடுக்காத அரசியல்வாதிகள் ஏன் இங்கு உள்ளார்கள் என்றும் 75 சதவீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு, இந்த மாவட்டத்தில் பிறந்த ஆளுமையுடைய அரசாங்க அதிபரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.