வரலாற்றிலேயே முதன்முறையாக பின்லாந்துக்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர் என்ற பெயரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிவுசெய்யவுள்ளார்.

பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (5) வியாழக்கிழமை ஜேர்மன் பயணமாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.

பின்லாந்து விஜயத்தின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், இரு நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார்.

வரலாற்றில் முதற்றடவையாக இலங்கை பிரதமர் ஒருவர் பின்லாந்து செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்போது தலைநகர் ஹெல்சிங்கியில் பின்லாந்துப் பிரதமர் யுஹா சிபிலர் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களுடன் பிரதமர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

பிரதமருடன் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, அரசியலமைப்பு சபையின் மேலதிக செயலாளர் யுரேஷா பெர்னாண்டோ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி ஆகியோர் பயணிக்கவுள்ளனர்.