லாஸ் வெகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி குறைந்தது 59 பேர் உயிரிழப்பதற்கும் 527 பேர் வரை காயமடைவதற்கும் காரணமான துப்பாக்கிதாரியான சூத்திரதாரி ஸ்டீஃபன் பேடக் என்பவர் வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

நேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லாஸ் வெகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சூத்தரதாரி ஒரு தீவிரமான சூதாட்டப் பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகில் முன்னர் குடியிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டீஃபன் பேடக், நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

லாஸ் வெகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும், பேடக்கின் இரு அறை கொண்ட வீட்டினை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்டனர்.

பொலிஸார் குறித்த சூத்திரதாரியான பேடக்கின் வீட்டினுள் நுழைந்து அறையை நெருங்கும் போது, அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மதக் கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேடக் அறையில் தங்கியிருந்த, அவரது பெண் தோழியென நம்பப்படும் மரிலோவ் டென்லீயிடம் பேடக்கை கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் கோரியிருந்தனர்.

இந்நிலையில், மாண்டலே பே ஹோட்டலில் அறையை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டென்லீ அவருடன் இருந்திருக்கவில்லையெ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரிலோவ் டென்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதேவேளை, குறித்த பெண் பேடக்கின் தோழி எனவும் தனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை எனவும் அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வெகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார் எனவும் சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாகவும் சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.