இதய மாற்று சத்திர சிகிச்சை செய்த ஒரு பெண்மணிக்கு, மீண்டும் இதய மாற்று சத்திர சிகிச்சை செய்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

இந்த சாதனை குறித்து அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிப்பதாவது,

இந்திய அணியின் தடகள வீராங்கனையாக இருப்பவர் ரீனா ராஜு. பெங்களூரூவைச் சேர்ந்த இவருக்கு 2009 ஆம் ஆண்டில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதன் போது அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதற்கு இதய மாற்ற சத்திர சிகிச்சை தான் தீர்வாக இருந்தபோது, அவர் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளைச்சாவடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயத்தை பொருத்தி, இதய மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டோம்.

இதற்கு பின்னர் அவர் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். அண்மையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற உடலுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபற்றினார். இதற்கு பின்னர் அவருக்கு தீடிரென இரத்த அழுத்தம் குறைந்து, சுய நினைவை இழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டிருக்கின்றன. இது குறித்த பரிசோதனைக்காக அவர் மீண்டும் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது அவருக்கு பொருத்தப்பட்ட மாற்று இதயத்தின் சில இரத்த குழாய்கள் சுருங்கியிருந்தன. இந்நிலையில் அவருக்கு மீண்டும் இதய மாற்று சத்திர சிகிச்சை செய்வது தான் தீர்வு என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் அதிர்ஷ்டவசமாக அவருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு மீண்டும் இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய சத்திர சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்வது இது தான் முதன் முறையாகும்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்