இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்போரால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர்.

தற்கொலை தாக்குதால்தாரிகளுடன் இந்திய பாதுகாப்பு படையினர் தொடந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே மிகவும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இந்திய இராணுவபடையின் பிஎஸ். எஃப். 182 ஆவது படைப்பிரிவின்   முகாம் அமைந்துள்ளது.

குறித்த இராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 தற்கொலைதாரிகள் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

இதனை சுதாரித்துக் கொண்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனையடுத்து முகாமில் உள்ள கட்டடம் ஒன்றில் பதுங்கியடி அவர்கள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது.

இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வீதியோரம் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.