பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வரலாற்று முக்கியமான நாளில் நடைபெறவுள்ள விசேட அமர்வில் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பும் போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேடஅமர்வு ஆரம்பமாக உள்ளது. இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதுடன் அதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆமோதித்து உரையாற்றவுள்ளார்.

செங்கம்பள வரவேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விசேட அமர்வுக்காக சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் வருகை தரவுள்ளனர்.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளர் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சபாநாயகர்களே வருகை தரவுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். இதன்படி இன்று மதியம் 1.30 மணியளவில் சார்க் நாடுகளின் சபாநாயகர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிநாடு் தூதுவர்களும் வருகை தரவுள்ளனர்.

இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

சபை அமர்வு வெளிநாட்டு விருத்தினர்களின் வருகையை அடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட அமர்வு ஆரம்பமாக உள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் விசேட பிரேரணை மீதான விவாதமும் நடத்தப்படவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். இதன்படி மாலை 4.30 மணி வரைக்கும் குறித்த விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

விசேட பாதுகாப்பு

வரலாற்று சிறப்புமிக்க தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளன. இதன்படி பாராளுமன்ற சந்தி தொடக்கம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்

இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அத்துடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகள், அலுமாரிகள் மற்றும் பெட்டகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

விசேட போக்குவரத்து சேவை

இன்றைய விசேட அமர்வின் பிரகாரம் விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படவுள்ளன. இதன்படி பாராளுமன்ற வளாகத்திற்கு எந்தவொரு வாகனமும் அனுமதிப்பட மாட்டாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனம் ஜயந்திரபுற தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பாராளுமன்ற வாயிலில் இருந்துபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பஸ் சேவையும் வழங்கப்படவுள்ளது.அத்துடன் ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்பினர், அரசியல் கட்சிபிரதிநிதிகளுக்கும் விசேட பஸ் சேவை வழங்கப்படவுள்ளது.

அதுமாத்திரமின்றி பாராளுமன்ற வளாகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகமே அப்போதைய பாராளுமன்றமாக இருந்தது. இதன்படி 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1982 ஆம் ஆண்டு வரை சுமார் 35 வருடங்கள் காலிமுகத்திடலில் பாராளுமன்றம் இயங்கி வந்தது. அதன்பின்னர் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரைக்கும் சுமார் 35 வருடங்களாக ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டையில் பாராளுமன்ற இயங்கி வருகின்றது.

சபாநாயகரின் வாழ்த்து

70 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை பாராளுமன்ற ஆட்சி முறைமையை இல்லாமல் செய்வதற்கு பல சதி திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவை முறியடிக்கப்பட்டன. ஜனநாயக ஆட்சியின் பிரதான இயந்திரமாக பாராளுமன்றம் திகழ்கின்றது.

இனிவரும் காலங்களில் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் 70 வருடகால வரலாற்றில் பதவியில் இருந்த சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்கள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். எனவே ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கு தற்போதைய பாராளுமன்ற சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.