(எம்.எப்.எம்.பஸீர்)

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனனாய்வுப் பிரிவு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குறித்த மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் குறித்த நால்வரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்தே அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானி அர்ஜுன் அலோசியஸ், அந் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, பிரதான கணக்காளர்  நுவன் சல்தாது மற்றும் பிரதான தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி சசின் தேவதந்ரி ஆகியோருக்கே இந்த தடை உத்தரவு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவினால் பிறப்பிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து பிணை முறி விநியோக நடவடிக்கைகள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றவியல் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக  சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் தப்புல டி லிவேரா நேற்று பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தார்.

பிணை முறி மோசடி தொடர்பில், விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழு விசாரணைகள் இன்று ஒரு வாரத்துக்கு பின்னர் மீள ஆரம்பமான போது  முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதிகள் குருக்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே, சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் தப்புல டி லிவேரா, அர்ஜுன மகேந்திரன் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை குற்றப் புலனயவுப் பிரிவு ஆர்ம்பித்துள்ளதாக ஆணைக் குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.