பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்றிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுக்க, திமுத்து கருணாரத்ன 93 ஓட்டங்களையும் டிக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் மொஹமட் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  422 ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசர் அலி 83 ஓட்டங்களையும் ஹரிஸ் சொகைல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் அசத்திய இலங்கையின் சுழல் மன்னன் 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

3 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து  138 ஓட்டங்களைப்பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த டிக்வெல்ல ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்றைய 5 ஆம் நாள் ஆட்டநேர நிறைவுக்குள்  136 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சளார்களின் மிகவும் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்கத் தடுமாறி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப்பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

21 ஓட்டஙகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் மன்னன் ரங்கன ஹேரத், 400 விக்கடெ்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற உலகசாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.