1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடணப்படுத்தப்பட்டு பரந்தளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 இந் நிலையில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்கை பிரகடணத்தை அங்கீகரித்து ஏற்றக் கொண்டதைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்கள் என அறிவிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தினம் அல்லது ஒரு விடயம் அனுஷ்டிக்கப்படுவது குறித்த விடயத்திற்கான தேவைப்பாடு எழுந்துள்ளமையாலும் அவ் விடயத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதாலுமே, இதனாலேயே புறக்கணிக்கப்படும் விடயத்தினையோ புறக்கணிக்கப்படும் சமூகத்தினையோ பாதுகாக்க இன்று பல தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. 

உதாரணமாக சிறுவர் தினம், முதியோர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்பனவற்றை குறிப்பிடலாம்.

அந்த வகையில் சிறுவர்கள் நாளைய சமூகத்தின் அடிநாதங்கள், அவர்களது உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் தவறாக வழி நடாத்தப்படுவதும் இன்றைய நவீன உலகம் எதிர்நோக்குகின்ற பல சவால்களில் முதன்மையானதாகவுள்ளது.

வளர்ச்சியடைந்த, வளாச்சியடைந்துவரும் நாடுகள் என்ற எதுவித வேறுபாடுகளுமின்றி ஒன்றிற்கு ஒன்று சளைத்ததில்லை என கூறுமளவிற்கு பாரிய பிரச்சினையாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறன.

மனித வாழ்வியலில் சிறுவர் பாராயம் என்பதும் பரிணாமத்தின் ஒரு முக்கிய பகுதி ஒரு சமூகத்தின் சிறுவர்கள் எதிர்கால சரித்திரங்களை தலையெழுத்தை வரலாற்றை நிர்ணயிக்கப்போகும் மூலாதாரங்கள் எதிர்காலத்தை படைக்கப்போகும் படைப்பாளிகளின் உரிமைகள் அவர்கள் இளம் மொட்டுக்களாக இருக்கும் போதே கிள்ளி எறியப்படுகின்றன.

“குழந்தைகள் நட்சத்திரத்தை ஆகாயத்தில் காண்பதில்லை மாறாக ஓடும் நதியில் கண்டு விடுகிறார்கள்” என பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் உவசென்கோவின் கருத்து ஆழ்ந்து அவதானிக்க வேண்டியதொன்றாகும். 

குழந்தைகளுக்கு பெரியவர்கள் எதை செய்து காட்டுகின்றார்களோ அதை பின்பற்றக்கூடியவர்கள் சிறுவர் பாராயத்தில் எது உண்மை எது பொய் என ஆராயும் திறனற்றவர்கள். எனவே வழிநடாத்துபவர்கள் அவர்களை சரியான முறையில் கையாள வேண்டும்.

சிறுவர்கள் சமூக கட்டமைப்பில் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் என அனைவரினதும் வழிகாட்டலிலும் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்தெடுக்கப்பட வேண்டியவர்கள் ஒவ்வொருவரும் சிறுவர்களின் ஒவ்வொரு அசைவினையும் கவனமாக அவதானித்து அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வகையில் அன்பினால் வழி நடாத்தப்படல் வேண்டும்.

இன்றைய உலகில் பெற்றோர்கள் வறுமை உயர் அந்தஸ்து போன்ற பல காரணங்களால் தங்களது பிள்ளைகளுடன் இருப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. தாய், தந்தை இருவரும் தொழிலுக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் உறவினர்களதும் சிறுவர் காப்பகங்களிலும் வளர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைகள் தாய் தந்தையின் அன்பை அரவணைப்பை இழக்கிறார்கள் சிறு வயதிலேயே மனதளவில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாக தனிமை சூழ ஒரு வித ஏக்கத்துடன் வளர்கிறார்கள். காலப்போக்கில் தனிமை விரக்தியாக மாறி கட்டுப்பாட்டை மீறி வெளியில் வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

கல்வியோடு ஒழுக்கம் நற்பழக்க வழக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டியவர்கள் தங்களை பராமரிக்க அன்பு செலுத்த எவரும் இல்லாமல் தத்தளித்து தங்களுக்கென உறவுகளை வெளியில் தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் தேடிக்கொள்ளும் உறவுகள் எவ்வாறனதோ அதே போல் சிறுவர்களும் வளர்ந்து வருகிறார்கள். பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அன்பு காட்டி ஆதரவு கொடுக்க யாருமில்லாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சமூகத்தில் மலிந்துள்ள புகைத்தல், போதைவஸ்த்து, திருட்டு உள்ளிட்ட பல இழிவான நடத்தைகளுக்கு இலகுவில் அடிமையாகிவிடுகின்றனர்.

இவ்வாறு பெற்றோரை விட்டு வெளியில் வரும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூகத்தில் உள்ளவர்களால் பாதிப்புக்குள்ளாகும் நிலையே சிறுவர் துஷ்பிரயோகம் என எளிதில் அடையாளப்படுத்தலாம். 

ஆனால் தற்போதுபெரும்பாலான சிறுவர்கள்  பெற்றோர்களாலும் பாதுகாவலாளர்களாலும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகின்றனர். சிறுவர்களின் அடிப்படை உரிமைகள், அவர்களது பிறப்புரிமையான கல்வியை கற்க விடாது தடை விதிப்பது, சிறுவர்களின் சக்திக்கும் நிலைக்கும் அப்பாற்பட்ட வேலைகளை செய்யத் தூண்டுதல், செய்வித்தல் காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளை வழங்குவது, அடிப்படை சுதந்திரங்கள் பறிக்கப்படுவது, கடத்துவது, விருப்பமின்றிய வேலைகளை செய்வித்தல் போன்ற அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் உள்ளடங்குகின்றன.

அந்த வகையில் சிறுவர் துஷ்பிரயோகங்களை உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம் என சமூகவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

மேற் கூறப்பட்ட துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை காப்பாற்றுவதற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல காணப்பட்ட போதிலும் மிகச் சிறந்த சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, மத சார்பான இடங்கள் ஆகியன சிறுவர் உரிமைகளை பாதுகாத்து சிறுவர்களை பாதுகாப்பதில் பெரும் பங்கை வகிக்க வேண்டும்.

சமுதாய கட்டமைப்பில் அடிப்படை கூறாக திகழும் குடும்பம் சிறுவர்களின் அமைதியான சூழலிற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் சிறந்ததொரு இடமாகும். சிறுவர்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு தேவைப்படும் அன்பு அரவணைப்பு பாதுகாப்பு என்பன முறையாக கிடைக்கும் பட்சத்தில் பெறுமளவிலான துஷ்பிரயோகங்கள் நிகழாமல் தடுத்து விடலாம்.

அன்புடனும் அரவணைப்புடனும் வளர்க்கப்படும் சிறுவர்கள் சகல விதங்களிலும் தெளிவுள்ளவர்களாக பாதுகாப்பான உள்ளுணர்வுடன் வளர்கிறார்கள். அவர்களது அறிவு மட்டம் ஏனைய குழந்தைகளை விட விரைவில் தேர்ச்சி பெறுகிறது என குழந்தை உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்ப கட்டமைப்பை அடுத்து சிறுவர்களின் சீரான வளர்ச்சியில் பெருமளவு பங்கு வகிப்பது கல்வி நிறுவனங்கள் ஆகும். ஏனெனில் குடும்பத்தில் சிறுவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கு அடுத்தபடியாக பாடசாலைகளில் தான் அவர்கள் நேரத்தை செலவழிக்கின்றனர்.

எனவே அதிபர்கள் ஆசிரியர்கள் சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சியலும் சமூக அறிவிலும் உள ரீதியான வளர்ச்சியிலும் பாரிய கவனத்தை செலுத்த வேண்டும். மாறாக “வேலியே பயிரை மேய்ந்த” கதையாக மாறிவிட கூடாது.

குழந்தை உளவியலாளர்களின் கருத்துப் படி சிறுவர்கள் சமூகத்திலிருந்து பாசம் அரவணைப்பு, பாராட்டு, பாதுகாப்பு போன்றவைகளை எதிர்பார்க்கின்றார்கள். இவை பொதுவாக எல்லா சிறுவர்களுக்கும் அடிப்படை. இவற்றை தாண்டியும் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை சிறுவர்களுக்கு சிறுவர் வேறுபடுகிறது.

 எனவே பெரியவர்கள் சிறுவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் எதை நிராகரிக்கிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பவற்றை பெற்றுக் கொடுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பனவற்றை தெரிந்து செயற்படுதல் அவசியம் என்கின்றனர்.

நவீன உலகில் சிறுவர்களை பாதுகாப்பதற்கு பராமரிப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் அவற்றையெல்லாம் கடந்தும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இல்லாதொழிக்கப்படும் வரை மனித இனத்தின் அழிவையும் காப்பாற்றுவது கடினம். சமூக அமைப்புகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றையும் தாண்டி மனித நேயத்தோடு அனைவரும் செயற்படும் பட்சத்தில் இது போன்ற சமூக பிரச்சினைகளுக்கு திர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

விஜித்தா