பாடகர் இராஜ் வீரரத்ன அண்மையில் வெளியிட்டிருக்கும் ‘தெனுனா’ என்ற பாடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பாடலில், சங்கீதக் கலைஞரான முதியவர் ஒருவர் தனது மனைவி இறந்ததும் இளம் பெண் ஒருவருடன் காதலில் விழுவதாகவும், குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த முதியவருக்கும் இளம் மனைவிக்கும் இடையில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகள் சிலவற்றையும் அந்தப் பாடல் சித்திரித்துள்ளது.

இது, இலங்கையின் சிரேஷ்ட சங்கீதக் கலைஞர் விக்டர் ரத்னாயக்கவின் உண்மை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தனது மனைவி காலமானதும் விக்டர் ரத்நாயக்க இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். இது, இலங்கைக் கலைஞர்கள் மத்தியிலும், விக்டரின் குடும்பத்தினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதன்படி, இராஜின் பாடல் விக்டரின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பிரதிபலிப்பதாகக் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இராஜின் இந்தப் பாடல் யூட்யூபில் சுமார் பதினெட்டு இலட்சம் பேரால் பார்க்கப்பட்டிருந்தாலும், அவர்களில் பலரும் இப்பாடலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இலங்கைக் கலைஞர்களும் விக்டருக்கு ஆதரவாக, இராஜை விமர்சித்து வருகின்றனர்.

இது பற்றி விக்டரின் மகன் ஜயந்த ரத்நாயக்கவிடம் கேட்டபோது, இராஜை ஒரு கலைஞராகவே தாம் கருதவில்லை என்பதால் இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.