(ஆர்.யசி)

எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும்  செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

  

சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சிங்கள மொழிக்கும் சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும். 

அதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் சுதந்திர தின நாளிலிருந்து இலங்கையில் சகல அரசகரும நிகழ்வுகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்வுகளிலும்  சிங்கள மொழியிலும்   தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் இயற்றப்பட வேண்டும். 

நாட்டில் நல்லாட்சிக்கான முக்கிய அடையாளத்தில் இது பிரதானமான ஒன்றாகும். சகல இன மக்களையும் பிரதிந்திதுவப்படுத்த இதுவே சரியான அடையாளமாகும். 

அதேபோல் தமிழ் மொழியில் தேசியகீதம் இயற்றப்படுவதை இனவாத செயற்பாடாக கருதும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின்  கருத்துக்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.