மட்டக்களப்பு, பதுளை வீதியில் அமைந்துள்ள வெளிக்காகண்டி கிராமத்தில் மக்களின் குடியிருப்புகளை பல தடவை புகுந்து அட்டகாசம் செய்த யானையொன்று  இறந்து 15  நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் உரியவர்கள் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானையை எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சேவகருக்கு இருந்தும் இன்று வரைக்கும் அந்த கிராம சேவகர்  சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானை இறந்து இன்றுடன் பதினைந்து நாட்கள் ஆகியதால் கிராமம் பூராகவும் துர்  நாற்றம் வீசுவதாகவும் இதை கவனிக்காமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இல்லாத பட்சத்தில் அதற்கு அடுத்ததாக இருக்கும் அதிகாரி என்ன செய்கின்றார் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமந்தப்பட்ட அதிகாரிகளே கிராம புறத்தில் உள்ள மக்கள் என்பதால் தம்மை ஏமாற்ற வேண்டாமெனவும் சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் வரை இருப்பதனால் சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளதால் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்துக்கு புதிய கிராம சேவகர் நியமித்து இன்றுடன் நாற்பது நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் அந்த கிராமத்தைச் சென்று பார்வையிடவில்லையென மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.