ஆப்கானிஸ்தானில், இடையன் போல் வேடமிட்டு வந்த இளைஞர், தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் நான்கு சிறுவர்கள் உட்பட இருபது பேர் படுகாயங்களுக்கு ஆளாயினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹுசைனியா ஷைதி முஸ்லிம் பள்ளிவாசல் அருகே ஜும்ஆத் தொழுகையின்போது இத்தாக்குதல் நேற்று (29) நடத்தப்பட்டுள்ளது.

ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், பள்ளிவாசலை அண்மித்ததும் தன் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. என்றபோதும், இச்சம்பவத்துக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தலிபான் உடனடியாக அறிவித்துள்ளது.