தனது 91 வயதில் காலமான, ‘பிளேபோய்’ சஞ்சிகையின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது சடலத்தைப் புதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுடனான உறவுகளைப் பகிரங்கமாகவே வைத்துக்கொண்ட ஹெஃப், மரணத்தின் பின் தனது உடலை, முன்னாள் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்காக, மர்லின் மன்றோவுக்கு அருகாமையில் தனது சமாதிக்கான இடத்தை சுமார் 75 ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண்களுக்கு அவர் வாங்கியிருந்தார்.

இச்செய்தி, மக்களிடம் இருவேறு கருத்துக்களைத் தோற்றுவித்திருக்கிறது.

தனது ‘கொள்கையை’ தான் மரணித்தபோதும் ஹெஃப் கடைப்பிடித்திருப்பதாகவும், பிளேபோயின் முதல் இதழில் எந்த நடிகையை நிர்வாணமாகப் பிரசுரித்திருந்தாரோ, அதே நடிகைக்கு அருகையிலேயே அவர் மீளாத் துயில் கொள்ள நினைத்தது பாராட்டத்தக்கது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

(பிளேபோய் முதல் இதழின் அட்டைப் படம்)

அதேவேளை, உயிருடன் இருக்கும்போதும் பெண்களைத் தனது பாலியல் அடிமைகளாக நடத்திய ஹெஃப், இறந்த பிறகும் மர்லின் மன்றோவின் ஆத்மாவை நிம்மதியாக இருக்க விடாமல் செய்துவிட்டார் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தனது வாழ்க்கை வரலாற்றில், “எனது நிர்வாணப் படத்தை வைத்து பணம் பண்ணியவர்கள் ஒரு நாகரிகத்துக்காகவேனும் எனக்கு நன்றி கூறியதில்லை. எனது புகைப்படம் தாங்கிய அந்த இதழ்களைக் கூட நான் காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருந்தது” என்று மர்லின் மன்றோ குறிப்பிட்டிருக்கிறார்.