(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வது தொடர்பில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது என சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாமின் பணிப்பாளர் நாயகமுமான ஜின் ஷின் தெரிவித்தார். 

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றிருந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சீன பொருளாதாரம் , துறைமுக அபிவிருத்தி மற்றும் கட்டட நிர்மான துறையின் முன்னேற்றங்களை காண்பிக்கும் முகமாகவே இந்த விஜயம் அமைந்திருந்தது. சீன அரச மட்டத்திலான இந்த சந்திப்பில்  கமினிஸ்ட் கட்சியின் வெளிவுறவு  பிரிவின் தலைவராகவும்  ஜின் ஷின் செயற்படுகின்றார். 

உலக பொருளாதார தொடர்புகளில் சீனாவின் வளர்ச்சி குறித்தும் ஓரு மண்டலம் ஒரு பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜின் ஷின் இதன் போது தமிழ் ஊடகவியலாளர்கள் தெளிவுப்படுத்தினார். சுமார் 2 மணித்தியாலம் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தமிழர்கள் மத்தியில் காணப்படும் சீனா தொடர்பான எதிர்மறையான நிலைப்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது. 

உள்ளுர் போரின் போது அரசாங்கத்திற்கு இராணுவ ரிதியில்  சினா உதவியமை மற்றும் போரின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் நழுவிய நிலையில் சர்வதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமை போன்ற செயற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் சீனா தொடர்பில் ஓரு எதிர் மறையான நிலைப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகியதாக தெரிவிக்கப்பட்டது. 

எனினும் சீனா தற்போது இலங்கையில் தமிழ் அரசியல் தரப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்டுத்தி கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கமினிஸ்ட் கட்சியின் வெளிவுறவு  பிரிவின் தலைவராகவும்  ஜின் ஷின்  தெரிவித்தார். 

தற்போது இலங்கையில் சாதகமான செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்படுகின்றன. அதே போன்று அங்கு முன்னெடுக்கப்படுகின்ற தமிழர்சார்ந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக சீனா அவதானித்து வருகின்றது. போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மக்கள் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது குறித்து சீனா கருத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.