கண்டி, புசல்லாவை பகுதியிலமைந்துள்ள சரஸ்வதி மத்திய கல்லூரியின் மீள் அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சத்து மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோர்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

சரஸ்வதி மத்திய கல்லூரியின் பாடசாலையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 96 மில்லியன் ரூபா இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பாடசாலை கட்டிடங்கள் மறு சீரமைப்பு, புதிய கல்வி வகுப்புகள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள், மாணவர்களுக்கான மானியங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், பாடசாலை மைதான புனரமைப்பு ஆகிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மேலும் இத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பு மேலும் மேலும் தொடரும் எனவும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத் திட்டம் இலங்கையிலும் இந்தியாவிலும் படிப்படியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.