ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யும்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவதூறு செய்கிறார்கள். மீண்டுமொரு போர் ஏற்படாமல், சகவாழ்வுடன் பயணித்தாலேயே நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பதுளைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பதுளை பிரதேச அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் குறைபாடுகளுடனும், சிரமங்களுடன் வாழ்கின்றனர். இது விவசாயம் மற்றும் பெருந்தோட்டங்களை கொண்ட மாவட்டமாகும். ஏனைய மாவட்டங்களுக்கு கிடைக்கும் கவனிப்பு இந்த மாவட்டத்துக்கு கிடைக்காதிருக்கும் பின்னணியை நாம் கண்டோம்.

அதனால் தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபையை ஒருங்கிணைத்து பரந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆரம்பித்து வைக்கப்பட்ட பதினோராயிரம் குடும்பங்கள் நன்மை பெறக்கூடிய குடிநீர் வினியோக திட்டம் மாவட்டத்துக்கு முக்கியமானதாகும். இலங்கை மக்களில் மூன்றில் இரண்டு அளவானோர் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலை எமது நாட்டில் மட்டுமல்ல. அமெரிக்கா உள்ளிட்ட உலகெங்கும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இயற்கையுடன் போராட வேண்டியுள்ளது.

இயற்கையுடன் போராடியே மனித சமூகம் முன்னேறியுள்ளது. கற்காலம் தொடக்கம் மனிதர்கள் இயற்கையுடன் போராடியே உணவு, உடை, உறையுளை பெற்றுக்கொண்டனர். இயற்கையுடன் சவால்விட்டு முன்னேறுவதற்கான உற்பத்திகள் விருத்தியடைந்தபோது அதற்கான தொழில்நுட்ப அறிவுடன் மனிதன் முன்னேறினான்.

எமது நாட்டுக்கு ஐயாயிரம் ஆண்டு வரலாறு இருப்பதனை சான்றாதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும் இது நானூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சிக்கு ஆட்பட்டும் முப்பது ஆண்டுகால போருக்கும் முகம் கொடுத்த நாடாகும். எமது தாய்நாட்டின் பௌதீக அமைவிடத்திற்கமைய வரலாறு முழுவதும் போராட்டத்தினாலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதன் காரணமாக உள்ளக விரிசல்களும் ஏற்பட்டிருந்தன. அந்த அனுபவங்களுடன் நாம்  எதிர்காலத்துக்காக, நாளை பிறக்கவுள்ள பிள்ளைகளுக்காக சிறந்ததொரு நாட்டை உருவாக்க வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு சில விடயங்கள் முழுமையடைய வேண்டும். அதிலொன்று நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையாகும். எமக்கு நல்ல ஸ்திரத்தன்மை இருக்கிறது. விமர்சிப்பவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் எதனைக் கூறினாலும் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனை நிரூபித்து காட்டியுள்ளோம். 

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு சர்வதேச ஆதரவு தேவையாகும். பிரதமரும் எமது மக்கள் பிரதிநிதிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை காட்டும் போது சர்வதேசம் எமது நாட்டின் அபிவிருத்திக்கு உதவி வழங்க தயாராக இருக்கிறது.

இங்கே பாராளுமன்றத்தில் வெற்றிபெற்ற அதேவேளை நான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் அரச தலைவர்களை சந்தித்து சர்வதேசத்தின் நற்பெயரை பெற்றுக்கொண்டேன். அதன் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டில் நிலையான சமாதானத்தை பேணுவதற்காக உண்மையான தேசிய நல்லிணக்கம் தேவையாக இருக்கிறது.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். அவ்வாறான சூழலில் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யும் போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவதூறு செய்கிறார்கள். மீண்டுமொரு போர் ஏற்படாமல், சகவாழ்வுடன் பயணித்தாலேயே நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என்பதனை தெளிவாக தெரிவிக்கிறேன்.

அரசாங்கம் என்ற வகையில் நாம் இலகுவான விடயங்களை செய்யவில்லை. பெரும் வெளிநாட்டு கடன் சுமையுடன் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகளுடன் முன்னெடுக்கும் அரசாங்க செயற்பாடுகளின் பெறுபேறுகளை எதிர்காலத்தில் காட்டமுடியும். எந்தவொரு அரசாங்கமும் குறுகிய காலத்தில் பெறுபேறுகளை காட்டவில்லை. அதற்கு ஓரளவு காலம் தேவைப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயக சுதந்திரத்தை நாம் உருவாக்கியிருப்பதனாலேயே ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தொலைபேசியில் உரையாடுவதற்கு அச்சமடைந்த காலம் ஒன்று இருந்தது. கடத்திச் சென்று காணாமல் செய்து விடுவார்கள் என்ற பயம் இருந்தது.ஆனால் அந்த சூழலை மாற்றினோம். 

கட்சி பேதமின்றி தவறிழைப்பவர்களை தண்டிக்கும் அரச கொள்கையை கொண்டுள்ளோம். ஐ.தே.க. வா, ஸ்ரீங்காவா அல்லது வேறு கட்சியா என்பது எனக்கு பிரச்சினை இல்லை. நாட்டை முன்னேற்றும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். அதன் மூலம் புதிய விடயங்களை நாட்டுக்கு காட்டியுள்ளோம். 

கடந்த அரசாங்கங்களில் தவறிழைப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் நாம் அந்த நிலையை மாற்றி நல்ல நாட்டை உருவாக்குவதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளோம். நாளைய எதிர்காலத்துக்காகவே இன்று பாடுபட வேண்டும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் வறட்சி மற்றும் வெள்ளத்தினால் விவசாய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டே உணவு உற்பத்தி மறுமலர்ச்சி திட்டம் ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் 6 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை தேசிய உணவு உற்பத்தி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

மாத்தளை மாவட்ட குருளுவெவ விவசாய குடியேற்ற பிரதேசத்தில் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. மாரி மழையுடன் தொடர்ச்சியாக விவசாயத்தை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கிறோம். இன்று தேங்காய் விலை பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அது திடீரென ஏற்பட்ட பிரச்சினையல்ல. வீடமைப்பு தொடர்பான தேசிய கொள்கை இன்மையினால் தென்னந்தோட்டங்கள் துண்டாடப்பட்டு விற்கப்பட்டதனால் பெருமளவு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன. மறுபுறம் வறட்சி நெற்செய்கை மற்றும் தென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே தேங்காயின் விலை அதிகரித்தது. 

ஆனால் காலநிலை மாற்றத்துடனான பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். கடந்தகால வறட்சியினால் நாட்டின் நெல்லுற்பத்தி அரைவாசியாக வீழ்ச்சியடைந்தது. அனைத்தையும் கருத்திலெடுத்தே தேசிய உணவுற்பத்தி திட்டத்தை ஆரம்பித்தோம். இறக்குமதி செய்யும் பொருட்களை விடவும் எமது பொருட்கள் பெறுமதியானவை.

பதுளை மாவட்டத்தின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நட்புறவுடன் இருப்பது மாவட்ட மக்கள் செய்த பாக்கியம் என கருதுகிறேன். சிறப்பாக பணியாற்றும் அரச அலுவலர்களை பாராட்டுகிறேன். அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இன்று புதிதாக நியமனம் பெறுவோரை வாழ்த்துகிறேன். 

எதிர்காலத்துக்காக நல்லதொரு நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவோம் என கௌரவமாக கேட்டு விடைபெறுகிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.