சீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்டினால் போதும்!

சீனாவின் விவசாய வங்கியே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சீனாவுக்கு இது புதிய வசதியல்ல. ஏற்கனவே, இதே தொழில்நுட்ப முறை மூலம் பணப் பரிமாற்றம், பொதிகள் பாதுகாப்பு போன்ற பல சேவைகளையும் செய்யக்கூடிய வசதிகள் சீனாவில் உள்ளன.

முகத்தை அடையாளம் கண்டுகொண்டபின் தனது தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் பதிவுசெய்ய வேண்டும். தேவையான பணத்தைத் தெரிவித்தபின், இரகசிய எண்ணைப் பதிந்தால் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற சுமார் 24 ஆயிரம் இயந்திரங்களை நிறுவிய பின் மீளெடுக்கப்படும் பணத் தொகை அதிகரிக்கப்படும் என குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

இதுபோன்ற இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பானவை என்றபோதும், இவற்றை நிறுவவும், நிர்வாகம் செய்யவும் அதிக செலவாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தமது தோற்றத்தைப் பதிவு செய்யவேண்டியிருக்கும் என்றும் தெரியவருகிறது.