மகன் ஒருவர் தாயாரை கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவமொன்று மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட - மெட்டில பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மகனால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குறித்த சந்தேக நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் சொத்துப் பிரச்சினையே கொலைக்காண காரணம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மகன் தாயாருடன் ஒரே காணியில் வசித்து வந்துள்ள நிலையில், சம்பவதினம் தாயார் மாத்திரம் வீட்டில் இருந்துள்ள நிலையில் தாயாருக்கும் சந்தேக நபரான மகனுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து தாயாரின் கழுத்தை மகன் நெரித்துள்ளார்.

இதையடுத்த தாயார் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்து சந்தேக நபரான மகன் தப்பியோடியுள்ளார்.

அயலவர்கள் குறித்த தாயாரை பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.