பிரபல சஞ்சிகையான ‘பிளேபோய்’ இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91வது வயதில் நேற்று (27) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ‘பிளேபோய் மென்ஷன்’ எனப்படும் தனது ஆடம்பர வீட்டில் காலமானார். 

பிளேபோய் இதழ் மூலம் 1960களில் பாலியல் புரட்சியொன்றை ஏற்படுத்தியவர் ஹெஃப்னர். ஹெஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் 1926 ஏப்ரல் 9ஆம் திகதி சிக்காகோவில் பிறந்தவர்.

உளவியல் பட்டதாரியான ஹெஃப், ஆரம்பத்தில், புகழ்பெற்ற ‘எஸ்குயர்’ இதழில் பணியாற்றினார். ஐந்து டொலர் ஊதிய உயர்வு கிடைக்காததால் அங்கிருந்து விலகி, நாற்பத்தைந்து பேரின் பங்களிப்புடன் பிளேபோய் இதழை 1953 டிசம்பர் மாதம் வெளியிட்டார். கடும் இறைபக்தி உடைய குடும்பச் சூழலில் பிறந்த ஹெஃப், அச்சூழலில் இருந்து வெளிவர விரும்பினார். அதுவே பிளேபோய் இதழாகப் பரிணமித்தது.

முதல் இதழில் திகதியோ, இதழ் எண்ணிக்கையோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. காரணம், இரண்டாவது இதழ் வெளிவருமோ, வராதோ என்ற சந்தேகம்தான்!

எனினும், ஹொலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ, திரையுலகில் புக முன்னர் கொடுத்திருந்த நிர்வாண போஸை நடுப்பக்கத்தில் தாங்கி வந்த பிளேபோய் முதலாவது இதழ், ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்தது.

அதன் பின்னர், இன்று வரை பிளேபோய் இதழ் தொடர்ந்து வெளிவருகிறது, முயல் குட்டியொன்றின் இலச்சினையுடன்! மேலும், கிளப்கள், உணவகங்கள் என்று பிளேபோயை அடிப்படையாக வைத்து பல வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு முறை திருமணம் முடித்தபோதும் அவை விவாகரத்திலேயே முடிந்தன.

“திருமணத்துக்குப் பிறகும் பெண் தோழிகள் இருந்தால் அதை மறைக்கக் கூடாது. வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எத்தனை வயதானவராக இருந்தாலும், நீங்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் காதலியின் வயதுதான் உங்களுக்கும்” என்பது ஹெஃப்பின் தாரக மந்திரம்!