திரைப்படம் ஒன்றுக்காகப் படமாக்கப்பட்ட காட்சியின்போது, நடிகரை கொள்ளைக்காரர் என நினைத்த பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜிம் டஃப் என்ற அந்த நடிகர், நிறுவனம் ஒன்றைக் கொள்ளையிட்டு வருவதாகக் காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அப்போது அங்கு எதேச்சையாக வந்த பொலிஸார், முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் வந்த நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தமது காரை விட்டிறங்கிய பொலிஸார் தமது துப்பாக்கிகளை நீட்டியபடி, ‘கொள்ளைக்காரரை’ துப்பாக்கியைக் கீழே போடுமாறு பணித்தனர். 

தன்னை உண்மையான கொள்ளைக்காரர் என்று தவறுதலாக நினைத்துவிட்ட பொலிஸாரிடம் உண்மையைக் கூறுவதற்காக, பொலிஸார் பக்கம் திரும்பிய நடிகர் மீது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

எனினும் துப்பாக்கி குறி தப்பியது. சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த நடிகர் உடனடியாக தன் கையிலிருந்த போலித் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு முகமூடியையும் கழற்றி எறிந்தார். அதற்கிடையில், படக் குழுவினர் தலையிட்டு உண்மையை விளங்கவைத்தனர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.