சமுர்த்தி பயனாளர்களின் குடும்ப அங்கத்தவர்களை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பாதுகாப்பு ஊழியர்களாகப் பணியமர்த்த அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

அமைச்சரவையில் இவ்வாரம் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், கடவைகளில் சமிக்ஞைகள் மற்றும் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்களைப் பொருத்தும் பணிகள் நிறைவுபெற்றதும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

தற்போது பாதுகாப்பற்ற 687 புகையிரதக் கடவைகள் இயங்கிவருகின்றன. இவற்றுக்கு, பொலிஸார் மூலமே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ரூபா 7,500 கொடுப்பனவு அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்கள் இந்த வேலைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டபோதும், குறைவான கொடுப்பனவு எனக் காரணம் காட்டி பணியில் இருந்து விலகிவிடுகிறார்கள்.

இந்நிலையில், சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை இப்பணிகளில் ஈடுபடுத்தவும், அவர்களுக்குக் கொடுப்பனவாக ரூபா 22,500வை வழங்கவுள்ளதாகவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.