கல்கிஸையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் கடுமையாக நடந்துகொண்ட புத்த பிக்குகள் மற்றும் குழுவினரது செயலை நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டித்துள்ளார்.

“உள்நாட்டுப் பிரச்சினையால் புகலிடம் தேடிப் படகுகளில் புறப்பட்ட மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் சிலர் இவ்வருடம் ஏப்ரல் மாதம் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணைக்குழு (யு.என்.எச்.சி.ஆர்)வால் கல்கிஸையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

“தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள் விரைவில் ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின்பேரில் வேறு நாடுகளில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

“இந்நிலையில், நேற்று அங்கு சென்ற புத்த பிக்குகள் உள்ளிட்ட முரடர்களும் காடையர்களும் அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் முகமாக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

“அமைச்சராக மட்டுமன்றி, அஹிம்சையைப் போதிக்கும் புத்தரின் பாதையில் செல்லும் பெருமைக்குரிய பௌத்தனாகவும் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“இதற்கு முன் 2008ஆம் ஆண்டிலும், 2013ஆம் ஆண்டிலும் ரோஹிங்யா உட்பட அகதிகள் பலரும் இலங்கையில் இடைத்தங்கலாக வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியமர்த்தப்பட்டனர்.

“இதற்கிடையில் பிக்குகளும் முரடர்களும் அவர்களை விரட்டியடித்த செயலை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.