புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் இறுதித்திர்ப்பு இன்று யாழ்.நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட போது வித்தியாவின் தாயார் நீதிமன்றில் மயங்கிவிழுந்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்ட்டதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்தா வித்தியாவின் தாயார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“ இன்று நீதி கொடுத்தால் போல என்ட பிள்ளை வரப்போறதில்லை. என்னத்ததான் கொடுத்தாலும் என்ட பிள்ளை வரப்போறதில்லை. 

இனி வரப்போற சமுதாயத்திற்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். எந்த வொரு தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது. என்னைப்போல் ஒருதாய் இருக்கக் கூடது. 

நீதிபதி ஐயா இளஞ்செழியன் உட்பட 3 நீதிபதிகளுக்கும் எமக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டதற்காக பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வாவுக்கும் அவர்களது குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

கடந்த இரண்டரை வருடங்களாக நான் பட்டபாடும் எனக்காக பாடுபட்ட ஊடகங்களுக்கும்  ஏனைய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  மரண தண்டனை இன்று விதிக்கப்பட்டது.

இதன் படி, 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திறந்த நீதிமன்றில் இருந்த வித்தியாவின் தாய் மயங்கி வீழ்ந்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.