சர்வதேசரீதியாக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள Lanka Hospitals Corporation PLC, Joint Commission International (JCI) இடமிருந்து பெருமதிப்புடைய, பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 

2017 ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 1 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் ஆய்வின் மூலமாக JCI இடமிருந்து இந்த தரச்சான்று அங்கீகாரத்தை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளும் முதலாவது மருத்துவ நிலையமாக அது மாறியுள்ளது.

சமூகரீதியாக பொறுப்புணர்வு மிக்க சுகாதார சேவை வழங்கல் நிலையம் என்ற வகையில், Lanka Hospitals தனது முதலாவது முயற்சியிலேயே இந்த அந்தஸ்தை எட்டியுள்ளதுடன், புதிய தரநடைமுறைகளின் கீழ் மிகவும் குறுகிய காலப்பகுதியில் இத்தரச் சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள உலகிலுள்ள ஒரு சில வைத்தியசாலைகளில் ஒன்றாகவும் அது மாறியுள்ளது. 

புதிய தர நடைமுறை தொடர்பில் JCI இன் 6 ஆவது பதிப்பானது 2017 ஜுலை 1 ஆம் திகதி அமுலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் இலக்குடன், 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச தரச்சான்று அங்கீகாரம் மற்றும் அறிவூட்டல், வெளியீடுகள் மற்றும் ஆலோசனைச் சேவைகளை JCI வழங்கிவருகின்றது. 

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கடுமையான தர நடைமுறைகளினூடாக அதியுச்ச செயல்திறனைப் பேணுவதற்கு உதவுவதற்கு அரசாங்க அமைச்சுக்கள், சர்வதேச ஆலோசகர்கள், சுகாதார முறைமைகள் மற்றும் முகவர் அமைப்புக்கள், வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் கல்வி மருத்துவ மையங்களுடன் பங்காளராக இணைந்து JCI 

செயற்பட்டு வருகின்றது.

சமீபத்தைய சாதனைப் பெறுபேறு தொடர்பில் Lanka Hospitals வைத்தியசாலையின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் பிரசாத் மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், 

“கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளோம். புதிய தர நடைமுறையின் கீழ் எமது முதலாவது முயற்சியிலேயே பெருமதிப்பு மிக்க Joint Commission International இன் சமீபத்தைய பதிப்பு வடிவத்தில் தரச் சான்று அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுள்ளமை எமது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் தரத்திற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.

Lanka Hospitals வைத்தியசாலையானது 2002 ஜுன் 7 ஆம் திகதியன்று Apollo Hospitals என்ற பெயரில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. குறித்த நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையான Apollo Colombo உள்நாட்டு சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது Lanka Hospitals என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. 

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் இந்த வைத்தியசாலை முக்கிய பங்காற்றி வருகின்றது. உலகில் மிகவும் நன்மதிப்புப் பெற்ற சில சர்வதேச சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குனர்களின் பக்கபலத்துடன், சர்வதேச தர நடைமுறைகளின் கீழ் கட்டுபடியாகும் சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகளை வழங்கும் முயற்சிகளை Lanka Hospitals முன்னெடுத்து வருகின்றது.