ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையக தலை­மை­ய­கத்தில் வைகோ மீது தாக்­குதல் நடத்த கைக்­கூ­லி­களை ஏவி­விட்ட இலங்கை அரசைக் கண்­டித்து இன்று 27-ஆம் திகதி காலை 11 மணிக்கு சென்­னை யில் உள்ள இலங்கைத் தூத­ரகம் முன்பு ம.தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லாளர் மல்லை சத்யா தலை­மையில் கண்­டன ஆர்ப்­பாட்டம் நடை­பெறும் என்று அக்­கட்­சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரை­சாமி அறி­வித்­துள்ளார்.

இது­தொ­டர்­பாக  அவர் நேற்று வெளி­யிட் ­டுள்ள அறிக்­கையில், ''சுவிட்ஸர்­லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கத்தின் தலை­மை­ய­கத்தில், மனித உரிமை ஆணை­யகத்தின் 36 ஆவது அமர்வு செப்டெம்பர் 11 ஆம் திகதி தொடங்கி 29 ஆம் திகதி வரை நடை­ பெ­று­கி­றது.

அங்கு உரை­யாற்­றிய ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர் வைகோ ஈழத்­த­மி­ழர்­கள்தான் இலங்கை  மண்ணின் பூர்­வ­குடி மக்கள் என்­ப­தையும், வர­லாற்றின் வைகறை பொழு­தி­லி­ருந்து தனி அரசு நடத்­திய வீர வர­லாறு தமி­ழர்­க­ளுக்கு உண்டு என்­ப­தையும் சான்­று­க­ளுடன் சுட்­டிக்­காட்­டினார். இலங்­கை­யி­லி­ருந்து ஆங்­கி­லே­யர்கள் வெளி­யே­றிய 1948இ-ல் சிங்­க­ளவர் கைகளில் ஆட்சி அதி­காரம் வந்த பிறகு கடந்த 60 ஆண்டு கால­மாக ஈழத்­த­மி­ழர்கள் சிங்­கள இன­வாத அரசால் ஒடுக்­கு­மு­றைக்கு ஆளா­ன­தையும், கல்வி, வேலை­வாய்ப்பு உரிமை பறிக்­கப்­பட்டு, மொழி, இன, பண்­பாட்டு அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்­ட­தையும், ஈழத்­த­மி­ழர்கள் தங்கள் உரி­மை­க­ளுக்­காக தந்தை செல்வா தலை­மையில் நடத்­திய அற­வழிப் போராட்­டங்­களை இலங்கை அரசு மிகக் கொடூ­ர­மான முறையில் ஒடுக்­கி­ய­தையும் வைகோ எடுத்­து­ரைத்தார்.

ஈழத்­த­மி­ழர்­களின் அர­சியல் சுய­நிர்­ணய உரி­மையை நிலை­நாட்ட ஆயுதம் தாங்­கிய போராட்­டத்­துக்கு தள்­ளப்­பட்டு, பிர­பா­கரன் தலை­மையில் விடு­தலைப் புலிகள் இயக்கம் போரா­டி­ய­தையும், ஈழத்­த­மி­ழர்­களை பூண்­டோடு கரு­வ­றுக்க 2009-ஆம் ஆண்டு ஜன­வரி முதல் மே மாதம் வரை யில் ராஜ­பக் ஷ அரசு அப்­பாவி தமி­ழர்­களை இலட்­சக்­க­ணக்கில் கொன்று குவித்­த­தையும் வைகோ எடுத்­து­ரைத்து, ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப் படு­கொலை நடத்­திய இலங்கை அரசு மீது சர்­வ­தேச நீதி விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும், தமி­ழர்கள் இறை­யாண்மை உள்ள அரசை அமைப்­ப­தற்கு ஐ.நா.மன் றம் உலகின் பல நாடு­களில் நடத்­தி­யது போன்று தமிழ் ஈழம் அமை­வ­தற்கும் பொது வாக்­கெ­டுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையக் கூட்­டத்தில் முழங்­கினார்.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையகக் கூட்­டத்தில் பங்­கேற்க வந்­துள்ள பல்­வேறு நாட்டுப் பிர­தி­நி­தி­க­ளுடன் தனி­யாக உரை­யா­டிய வைகோ, ஈழத்­த­மி­ழர்­களின் அர­சியல் இறை­யாண்­மையை மீட்­டெ­டுக்க வேண்­டி­யதன் தேவையை எடுத்­துக்­கூறி ஆத­ரவு திரட்­டினார்.

இந்­நி­லை­யில்தான் நேற்று 25-ஆம் திகதி, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்­டத்தில் வைகோ இரு­முறை உரை­யாற்­றி­விட்டு வந்த நேரத்தில் சிங்­க­ள­வர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்­து­கொண்­டனர். அதில் ஒரு சிங்­களப் பெண்­மணி இலங் கைப் பிரஜை அல்­லாத நீ எப்­படி இலங்­கை யைப் பற்றிப் பேசலாம்? என்று கேட்டார்.

எங்­க­ளுக்கும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கும் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளாக தொப்­புள்­கொடி இரத்த உறவு இருக்­கி­றது. எனக்கு பேச உரிமை இருக்­கி­றது என்று பதி­லடி கொடுத்த வைகோவை சிங்­க­ளவர்கள் பலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்­சித்­துள் ­ளனர்.

பன்­னாட்டு அரங்­கு­களில் ஈழத்­த­மி­ழர்­க ளின் குரலை எழுப்ப முடி­யாமல் ஒடுக்கி விடலாம் என்று எக்­கா­ள­மிட்ட இலங்கை அரசு,  வைகோ மூலம்  ஐ.நா.வில் ஈழத் தின் குரல் ஓங்கி ஒலிப்­பதை தாங்க முடி­யாமல் ஆத்­தி­ரப்­பட்டு, வைகோ மீது தாக்­குதல் நடத்த கைக்­கூ­லி­களை ஏவி விட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமை மன்­றத்­தி­லேயே நடை­பெற்ற இந்த நிகழ்ச்சி ஐ.நா. மன்­றத்­துக்கு விடுக்­கப்­பட்ட அறை­கூவல் ஆகும். இலங்கை இன­வெறி அர­சுக்கு மறு­ம­லர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்­ட­னத்தைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

ஈழத்­த­மி­ழர்­களின் நீதிக்­காக அர­சியல் சுய­நிர்­ணய உரி­மைக்­காக ஐ.நா. மன்­றத் தில் உரிமை முழக்­க­மிடும் வைகோவின் முழு பாது­காப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையகம் உறு­தி­செய்ய வேண்டும். இந்­தி­யாவின் குடி­மகன், பாரா­ளு­மன்­றத்தில் 24 ஆண்டு காலம் உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றிய வைகோ மீது நடந்த தாக்­குதல் முயற்­சியை இந்­திய அரசு கண்­டிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கிறேன்.

ஜெனிவா ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யக தலை­மை­ய­கத்தில் வைகோ மீது தாக்­குதல் நடத்த கைக்­கூ­லி­களை ஏவி­விட்ட இலங்கை அரசைக் கண்­டித்து நாளை (இன்று) 27ஆம் திகதி காலை 11 மணிக்கு சென்­னையில் உள்ள இலங்கைத் தூத­ரகம் முன்பு கழகத் துணைப் பொதுச்­செ­ய­லாளர் மல்லை சத்யா தலை­மையில் கண்­டன ஆர்ப்­பாட்டம் நடை­பெறும்.'' என்று தெரி­வித்­துள்ளார்.