அறுபது கிராமங்களின் சுபீட்சத்துக்காக ஏழு சிறுமிகளை மேலாடை இன்றி இரண்டு வாரங்கள் கோயிலில் வைத்து பெண் கடவுளராக வழிபட்ட சம்பவம் மதுரையின் வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த காணொளியொன்று கோவை செய்தி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்த கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

எனினும், அந்தச் சம்பவம் குறித்து கோயில் தரப்பிலோ, பெற்றோர் தரப்பிலோ எந்தவொரு புகாரும் அளிக்கப்படாததால், இதுபோன்ற வழிபாடுகளை இனி நடத்த வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழிபாட்டின்போது, பூப்பெய்தாத ஏழு சிறுமிகள் மேலாடைக்குப் பதிலாக தங்க நகைகளை மட்டுமே அணிந்துகொண்டு இரண்டு வாரங்களுக்கு கோயிலிலேயே தங்கியிருப்பார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக ஒரு பூசாரியும் கோயிலில் தங்கியிருப்பார்.

கடந்த எட்டு வருடங்களாக இச்சடங்கு நடைமுறையில் இருந்து வருவதாகவும், இதுவரை இதுபற்றி எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் அப்பகுதிவாசிகள் கூறியுள்ளனர்.