மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார், தாழ்வுமடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தாழ்வுபாட்டு கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து மன்னார் நகரிற்கு வந்ததாகவும் பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் நேற்று காலை முதல் குறித்த நபரை அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியதாகவும் சடலத்தை அடையாளம் காட்டிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வருகை தந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற விடயம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.