எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சியென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும். 

விராட் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன் கடினமாக உழைத்தால், எந்த வித கடினமான காலங்களையும் கடக்க முடியும். அது கடினமாக உழைத்தால் மாத்திரமே முடியும்.

எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

கிரிக்கெட்டின் ஒவ்வொரு வகையிலும் ஒருவர் எங்கு தவறுகிறார் என்பதை முதலில் அறிய வேண்டும். அடுத்த 2 வருடங்களுக்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்ற வீரர்களை முதலில் தெரிவு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களை சிறப்பாக கையாள வேண்டும். சிறப்பாக பயிற்சியளிக்க வேண்டும், அதன் பின்னர் அவர்கள் சிறப்பாக விளையாட காலம் வழங்க வேண்டும்.

இது பயிற்றுவிப்பாளரினதோ, அணித் தலைவரினதோ அல்லது நிர்வாகத்தினதோ தனிப்பட்ட பொறுப்பல்ல. அனைவரும் ஒன்று பட்டால் மாத்திரமே வெற்றி சாத்தியமாகும்.

இலங்கை அணியின் மிக கவலையான விடயம் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாக சோபிக்காததுதான். அது ஏன் என்று தெரியவில்லை. சிரேஷ்ட வீரர்களே இளம் வீரர்களை வழிகாட்ட வேண்டும்.

அடிமட்டத்திலேயே பிரச்சினை உள்ளது. பாடசாலை கிரிக்கெட் போட்டிகளும் சரி, முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளும் சரி அந்தளவு போட்டி மிக்கதாக இல்லை. உண்மையில் பாடசாலை மட்ட கிரிக்கெட் சிதைவடைந்துள்ளது.

ஒரு நீண்ட போட்டியில் விளையாட தேவையான உடல் வலிமையை எமது உடல் கொண்டிருப்பதில்லை. அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.