புதிய அரசியல் அமைப்பு மூலமாக தீர்வு உண்டாகும் என கூறிய போதிலும் அதிகார பரவலாக்கல் பாரிய சிக்கல்களை  உருவாக்கும். இதனால் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர் வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. 

அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும், கூறுவது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளன. ஏமாற்று வேலைகளை நிறுத்த வேண்டும் எனவும் இந்தப் பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் மல்வத்து, அஸ்கிரிய மாநாயக தேரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பு குறித்து மாநாயக தேரர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளனர். 

 மல்வத்து மாநாயக தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கூறுகையில், 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகவும் உள்ளது. அதேபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஆகவே முறையான வகையில் அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைவரதும் ஒத்துழைப்புடன் இதனை கொண்டுவர வேண்டும். மாறாக எவரதும் தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி இவற்றை கையாளக் கூடாது.  மேலும் மக்களின் கருத்துக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளை நிராகரித்து ஒருபோதும் அரசியல் அமைப்பு உருவாக்க முடியாது. இதனை அரசாங்கம் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். 

அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும், கூறுவது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது. மக்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அரசாங்கம் தனக்கு தேவையானதை செய்துவருகின்றது என்பதே இன்றுள்ள முகப்பெரிய குற்றச்சாட்டாகும். அரசாங்கம் மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளை கவனிக்காதுவிட்டால் நாடும் இனமும் பௌத்த சாசனமும் அழியும் நிலை ஏற்படும். நாட்டின் பெளத்த கொள்கைக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும். மக்கள் அமைதியாகவும் நாடு பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் இவற்றை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

அஸ்கிரிய மாநாயக தேரர் ஆனமடுவே தம்மதாச தேரர் கூறுகையில்,  

புதிய அரசியல் அமைப்பு ஒன்று அவசியமா? இல்லையா? என்பது குறித்து நாம் ஆழமான சிந்திக்க  வேண்டும். அதிகாரம் பரவலாக்கல் என்று கூறிக்கொண்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது நாட்டுக்கு ஆரோக்கியமான ஒன்றாக அமையாது என்ற நிலைப்பாடு உள்ளது. 

மாகாணசபை முறைமையிலும் குளறுபடிகள் உள்ளன. எனினும் இப்போது மாகாணங்கள் இயங்கி வருவதனால் நாம் சற்று அமைதியாக உள்ளோம். இந்த நாடு மிகவும் சிறியதொரு நாடாகும். இந்த நாட்டினை துண்டாடும் நோக்கங்கள் தடுக்கப்பட  வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். 

பாரளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் அமைப்பு  விடயத்தில் இணக்கம் தெரிவித்த போதிலும்  மக்கள் புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் ஆதரவை தெரிவிக்கின்றனரா? என்பதை ஆராய வேண்டும். ஆகவே புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்கள் கருத்தை ஆராய வேண்டியது முக்கியமான விடயமாகும் என நாம் நினைக்கின்றோம். இது சாதாரண விடயம் அல்ல. ஆகவே மக்களின் நிலைப்பாட்டை ஆராய்வதே பிரதானமாகும் என்றார்.