இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சுமத்தப்பட்ருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், “கிரிக்கெட்டின் கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே இந்தப் பிரிவின் பொறுப்பு. அதற்காக, தேவைகள் ஏற்படின் விசாரணைகளையும் இப்பிரிவு நடத்தும். இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை ஒரு சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் பலரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.

“தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால், அது குறித்து இப்போது எதுவும் கருத்து வெளியிட முடியாது. குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல்கள் தெரிந்த எவரும் எம்மைத் தொடர்புகொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை - இந்தியப் போட்டிகளின்போது இலங்கை அணியின் சில நடவடிக்கைகள் இயற்கைக்கு மாறாக இருந்ததாக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.

அது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை நடத்த வேண்டும் என்று நாற்பது கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் சபையில் கடிதம் அளித்திருந்தனர்.

எனினும், இதுபற்றி இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை நடத்தக் கூடாது என்றும், தேவைப்பட்டால் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரமோதய தெரிவித்திருந்தார்.