களுத்துறை, புளத்சிங்கள பொலிஸில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சினிமாப்பாணியில் விளக்கமறியல் கழிவறை சுவரை துளையிட்டுக்கொண்டு நேற்று இரவு தப்பியோடிய நிலையில் மீண்டும் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மத்துகம பொலிஸாரால் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விளக்கமறியலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் நேற்று இரவு விளக்கமறியலிலுள்ள கழிவறை சுவரின் ஒரு பகுதியை மிகவும் நூதனமான முறையில் துளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதே வேளையில் குறித்த சந்தேக நபரை சந்திப்பதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்

அதன் போது விளக்கமறியலில் குறித்த நபரை தேடியபோதே தப்பிச்சென்ற விடயம் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இன்று நண்பகல் குறித்த நபரை மீண்டும் கைது செய்துள்ளனர்.