43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் பதக்கப் பட்டியலின்படி மேல் மாகாண அணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி 90 தங்கப் பதக்கங்களையும் 63 வெள்ளிப் பதக்கங்களையும் 59 வெண்கலப் பதக்கங்களையும் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. 

இரண்டாவது இடத்தை  மத்திய மாகாணம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என முறையே 36, 33, 39 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், வயம்ப 22, 23, 40 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்தப் போட்டிகளில் முதல் நாளில் (நேற்று 22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் வெகுவாகப் பிரகாசித்தனர். 

கிழக்கு மாகாண வீரர் டி.எம்.ஆஷிக் பரிதிவட்டம் எறிதலில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார். வடக்கு மாகாண வீராங்கனை அனிதா ஜெகதீஷ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய இலங்கை சாதனையையும் படைத்தார்.

ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முதலாம் கட்டப் போட்டிகள் காலை 7 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்றது. இதில் எட்டு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த கயந்திகா 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென்மாகாணத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார். இவர் பந்தய தூரத்தை 2.07.47 வினாடிகளில் கடந்தார்.

இவரைத் துரத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற அதே மாகாணத்தை சேர்ந்த நதீஷா ராமநாக்க பந்தய தூரத்தை 2.08.13 வினாடிகளில் கடந்தார். வெண்கலப் பதக்கத்தை வடமேல் மாகாண வீராங்கனை தில்ருக்ஷி வென்றார்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் ஹேரத் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1.52.42 வினாடிகளில் கடந்தார். வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீரர் குமாரவும், ஊவா மாகாண வீரர் குஷாந்த வெண்கலத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மேல் மாகாண வீரர் இஷார சந்தருவன்  4.60 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். வடமேல் மாகாண வீரர் செனரத் வெள்ளிப் பதக்கத்தையும் மேல் மாகாண வீரர் கருணாரத்ன வெண்கலகத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சப்கரமுவ மாகாண வீரர் விஜேரத்ன பந்தய தூரத்தை 22.08 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதில் கிழக்கு மாகாண வீரர் எம்.எவ்.உடாயர் (22.16 வினாடிகள்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெண்கலப் பதக்கத்தை மேல் மாகாண வீரர் சமோத் வென்றார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை ஊவா வீராங்கனைகளான எஸ்.எல்.விதானகே மற்றும் உதயாங்கனி ஆகியோர் வென்றனர். இதில் தங்கம் வென்ற எஸ்.எல்.விதானகே பந்தய தூரத்தை 25.16 வினாடிகளில் கடந்தார். இதில் வெண்கலப் பதக்கத்தை தென்மாகாண வீராங்கனை எவந்தி எமேஷிகா வென்றார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியில் சப்ரகமு வீரர் ரத்னசேன 52.52 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். இதில் வெள்ளிப் பதக்கத்தை ஊவா வீரர் சதுரங்கவும், வெண்கலப் பதக்கத்தை சப்ரகமுவ வீரர் ரத்னசேனவும் வென்றனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியில் வடமேல் மாகாண வீராங்கனை மதுஷானி வென்றார். இவர் பந்தய தூரத்தை 1.01.20 வினாடிகளில் கடந்தார். இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை முறையே சப்ரகமுவ வீராங்கனைகளான துலானி மற்றும் லக்மாலி ஆகியோர் வென்றனர்.