இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் சார்க் மருத்துவக் கல்லூரிக்கான கட்டட வரைபடம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பூர்த்தியாகும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்தின்போது, சார்க் மருத்துவக் கல்லூரிக்கான திட்டம் ஒன்றை சார்க் இயக்குனர் நாயகம் கையளித்திருந்ததாகவும், அதை நிர்மாணிப்பதற்கான சகல உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது, அந்தக் கல்லூரியை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான ஆலோசனையை அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கியிருந்தார். இந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதற்கான வரைபடம் தயாரிக்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கல்லூரியை நிர்மாணிப்பதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்று தெரியவருகிறது.

சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இக்கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.