ஐக்கிய நாடுகள் சபையில் அஸர்பைஜான் ஜனாதிபதி மிக முக்கியமான பேச்சை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவையில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது மகள் செய்த காரியம் மக்களை எரிச்சலூட்டியுள்ளது.

நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், அஸர்பைஜானுக்கும் அதன் அண்டை நாடான ஆர்மேனியாவுக்கும் இடையில் 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் பற்றி அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹம் அலியேவ் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

தம் நாட்டின் மீது ஆர்மேனியா இனப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது என்றும், போர் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவரது மகள் லெய்லா அலியேவா (33) தனது கைத்தொலைபேசியில் முகத்தைச் சுளித்தும், நெளித்தும் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சி நேரலையாக உலக நாடுகளெங்கும் ஒளிபரப்பாகின.

இதையடுத்து லெய்லா மீது ஊடகங்களும் இணையதளவாசிகளும் வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

லெய்லாவுக்கு அருகே அவரது தாயார் மேரிபான் (53) இருந்தும் லெய்லாவின் செயல் குறித்து அவர் எதுவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.