ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.

இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் கல்வித்துறையில் இந்தியா வழங்கிவரும் பங்களிப்பின் ஒரு அம்சமாக இந்தப் புலமைப் பரிசில் திட்டம் 2006ஆம் ஆண்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாயிரம் ரூபாவாக இருந்த இந்தத் தொகை, கடந்த ஆண்டு முதல் 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.