வகுப்பில் ஆசிரியை தண்டித்ததால் மனமுடைந்த ஐந்தாம் வகுப்புச் சிறுவன் விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் இடம்பெற்றுள்ளது.

நவ்னீத் பிரகாஷ் (11) என்ற அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறான்.

அதில், “அப்பா! இன்று எனது முதலாவது பரீட்சை. ஆனால், என்னை மூன்று பாடவேளைகளாக எனது வகுப்பாசிரியை வெளியே நிறுத்திவைத்துவிட்டார். நான் அழுதபடியே நின்றிருந்தேன். நான் சொன்ன எதையும் வகுப்பாசிரியை கேட்கவேயில்லை. மாறாக, அவருக்குப் பிடித்த மாணவர்கள் சிலர் சொல்வதையே அவர் நம்பினார். நான் இன்று எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகிறேன். இனி யாரையும் இது போல் கடுமையாகத் தண்டிக்க வேண்டாம் என்று எனது ஆசிரியையிடம் கூறுங்கள்” என்று எழுதியிருந்தான்.

வீட்டில் இருந்த நவ்னீத் திடீரென்று வாயில் நுரை தள்ளக் காணப்பட்ட அவனது பெற்றோர், உடனடியாக அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அவனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தான் எழுதிய கடிதத்தை ஒரு கண்ணாடிக் கோப்பையில் வைத்து பொலித்தீனால் சுற்றிப் பொதி செய்திருந்தான். அந்தக் கண்ணாடிக் கோப்பையில் இருந்து வந்த துர்மணத்தையடுத்தே அவன் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.

நவ்னீத்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், பாவனா என்ற அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.