தடை விலக்கப்பட்டதையடுத்து இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், கொழும்பிலும் வடபகுதியிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புலிகளுடன் தொடர்புடைய, பயங்கரவாதத்துக்கு உதவும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் நானூறு தனி நபர்களையும் அமைப்புகளையும் கடந்த ஆட்சியின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தடை செய்திருந்தார்.

அந்தத் தனி நபர்களுள் அருட்தந்தையும் ஒருவர்.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து அருட்தந்தை 1997ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். 

எனினும், புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் தற்போதைய அரசின் முயற்சியின் கீழ் மேற்படி தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இதையடுத்தே அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் இலங்கை வந்துள்ளார். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் உட்பட இலங்கையின் தென், வட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டினால், ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையான தாம் சமய ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.