நள்ளிரவுவேளைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 18 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நாடு முழுவதும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நகர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த 18 பேரையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக அம்பாறை, மட்டக்களப்பு நகர் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாரின் திடீர் சோதனை நடவடிக்கை வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 7 பேரையும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த  4 பேர் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை அம்பாறை நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 4 பேரையும் வடிசாரயத்துடன் ஒருவரையும் மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவரையும் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டவர்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக தொடர்ந்து சகல பொலிஸ் நிலையங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெறும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.