பாகிஸ்­தானில் உள்ள பாது­காப்பு ஏற்­பா­டு­களை ஆராய்­வ­தற்கு எமது விசேட குழு­வி­னரை அனுப்பி அவர்கள் இறுதி முடிவை அறி­வித்­த­பின்­னரே நாம் பாகிஸ்தான் சென்று விளை­யா­டு­வதா இல்­லையா என்­பதைத் தீர்­மா­னிப்போம் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரியான அஷ்லி சில்வா தெரி­வித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு போட்­டிகள் கொண்ட டெஸ்ட், 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரு போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 போட்டித் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

இதில் அனைத்து போட்­டி­களும் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்தத் தொடரின் கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டியை பாகிஸ்தானில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஆனாலும் அங்கு எமது வீரர்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் மட்­டுமே நாம் அங்கு சென்று விளை­யா­டுவோம் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது.

பாகிஸ்தான் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று நடை­பெற்­றது. இந்த சந்­திப்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால், ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க, இலங்கைக் கிரிக்­கெட்டின் பிர­த­ம  நிறை­வேற்று அதி­காரி அஷ்லி டி சில்வா மற்றும் கிரிக்கெட் முகா­மை­யாளர் அசங்க குரு­சிங்க ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இந்தத் தொடர் குறித்து கருத்து தெரி­வித்த அணித் தலைவர் சந்­திமால், புதிய வீரர்­க­ளுடன் சேர்த்து நல்­ல­தொரு அணியை எமக்கு தேர்­வுக்­குழு தந்­தி­ருக்­கி­றது. இதை வைத்­துக்­கொண்டு நாம் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொடரில் சிறந்­த­தொரு போட்­டியைக் கொடுக்க எதிர்­பார்க்­கிறோம்.

அஞ்­சலோ மெத்­தியூஸ் காயம் கார­ண­மாக முத­லா­வது டெஸ்­டி­லி­ருந்து வில­கி­யுள்ளார். அவரது இடத்தை நிரப்­பு­வது கடினம். ஆனாலும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் அஞ்­சலோ அணியில் இணைந்­து­கொள்வார் என்று எதிர்­பார்­க்­கிறோம் என்றார்.

இந்தத் தொடரில் நடை­பெ­ற­வுள்ள இரு டெஸ்ட் போட்­டி­களில் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. கிரிக்கெட் வர­லாற்றில் இலங்கை அணி முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.