ஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் டாரஞ்சித் சிங் சந்து மற்றும் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.நடரசாலிங்கமும் கைச்சாத்திட்டனர்.

தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 199 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது.

குறித்த மேம்படுத்தல் திட்டத்தில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட வகுப்பறைகள் ஆய்வகம் நிலையத்தை சுற்றிய பாதுகாப்பு சுவர்கள்  ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களின் புனரமைப்பு புதிய தொழிற் பயிற்சி கருவிகள் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் என்பன உள்ளடங்குகின்றன. 

இத் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் வேலைவாய்ப்பு சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் 500 திறமையான இளைஞர்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில் சார் பயிற்சி மற்றும் திரன் மேம்பாட்டுத்துறையில் அபிவிருத்தியை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க  இத் திட்டம் இணங்கியுள்ளது.