"தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை, கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரியுள்ளோம். இதன்படி ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும். மேலும் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் எந்த கட்சியில் போட்டியிடுவீர்கள்" என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களை பார்த்து நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். 

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளூராட்சி தேர்தல் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியின் போது இழைக்கப்பட்ட அநீதிகளை சீர் செய்யவே காலம் தேவைப்பட்டது. முன்னைய ஆட்சியில் சிங்கள மக்கள் மாத்திரம் வாழும் சிறிகொத்தா அமைந்துள்ள பிரதேச பல்லின தொகுதியாக மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து விசேட அறிவிப்பு நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"உள்ளூராட்சி மன்ற தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்தவுள்ளோம். அனைத்து கட்சிகளின் இணக்கத்துடனே நாம் புதிய முறைமையை அமுலுக்கு கொண்டு வந்தோம். சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது. இதனை சீர் செய்வதற்கே எமக்கு காலம் தேவைப்பட்டது. தற்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் முறைமையொன்றை கொண்டு வந்துள்ளோம். 

தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அஞ்சவில்லை. தேர்தலுக்கு அச்சமில்லாமல் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை டிசம்பரில் நடத்த திட்டமிட்டாலும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் வரவு–செலவு திட்டமும் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையும் உள்ளன. ஆகையால் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த முடியாது. இதன்படி ஜனவரி மாதம் தேர்தலை நடத்துமாறு கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரினோம்.

இதன்படி ஜனவரி மாதம் உள்ளூரட்சி மன்ற தேர்தலை நடத்த முடியும். எனினும் நாம் தாமதம் செய்வது தேர்தலுக்கு அஞ்சியே என எதிரணியினர் கூறுகின்றனர். நாம் தேர்தலுக்கு அஞ்சவில்லை. தேர்தல் திகதி தொடர்பில் சிக்கல் உள் ளது. இதன்காரணமாகவே நாம் தேர்தலை பின்தள்ள வேண்டி யுள்ளது.

எனினும் தற்போது கூட்டு எதிர்க்கட்சியினரே தேர்தலுக்கு அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு போட்டியிடுவதற்கு கட்சி இல்லை. அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலா போட்டியிடப்போகின்றனர். எனவே தேர்தல் நடத்தினால் எந்த கட்சியில் போட்டியிடுவீர்கள்" என  கேள்வி எழுப்பினார்.