எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்  போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை அணி நேரடித் தகுதியை பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து அணிக்கொதிராக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வியடைந்ததையடுத்து இந்த அதியசம் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள  2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் 10 அணிகள் பங்குபற்றி விளையாடவுள்ளன. 

அவற்றில் ஏழு அணிகள் தரவரிசையின் அடிப்படையிலும், போட்டியை நடத்தும் நாடு உட்படமொத்தமாக 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.

இதேவேளை, இரு அணிகள் தகுதிப்போட்டிகள் மூலம் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்பது ஐ.சி.சி. விதிமுறை.

இந்நிலையில் ஐ.சி.சி.யின் தரவரிசையில் முதல் ஏழு இடங்களிலும் உள்ள அணிகளான இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள்  2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு நேரடித் தகுதியைப்பெற்றுவிட்டன.

அண்மையில் இந்திய அணியுடன் இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் இந்த நேரடித் தகுதியை பெற்றுவிடலாம் என்ற வாழ்வாவா? சாவா? கட்டத்திலும் தோல்வியடைந்த நிலையில் இலங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை நம்பியிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அணிக்கு அதிர்ஷடம் கத்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளிலும் அல்லது 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே மேற்கிந்திந்தீவுகளால் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி கிடைக்கும் நிலையிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் தோல்வியடைந்து தரவரிசையில் தனது தகுதியை இழக்க, எட்டாவது அணியாக இலங்கை அணி தனது நேரடித் தகுதியை உறுதிப்படுத்தியது.

இதனால்,2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க, தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் மேற்கிந்தியத் தீவுகள் அணி தள்ளப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண தகுதிகாண் போட்டிகள், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ளன.

இதில் மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து உட்பட 10 அணிகள் பங்குபற்றவுள்ளன.

தகுதிகாண் போட்டித் தொடரில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொள்ளும் அணிகள் மாத்திரமே 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணதொடரில் பங்குபற்றும் 9 ஆம் மற்றும் 10 ஆம் அணிகளாகத் தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.