(க.கமலநாதன்)

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் சுதந்திரக் கட்சியை வீழ்த்த தனிக்கட்சி ஆரம்பித்தவர்களின் சூத்திரங்கள் சாத்தியப்படவில்லை என  காணி இராஜாங்க அமைச்சர்  டி.பி ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற  சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஒன்றிணைவுடனேயே போட்டியிடவுள்ளது. 

சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத சில தரப்பினர் விடுக்கும் கோரிக்கைகளுக்காக  ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள கட்சி தயாரில்லை.

இவர்கள் மஹிந்த தலைமையில் ஒரு கட்சியை உருவாக்கி ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற கோணத்தில் செயற்படுகின்றனர். அந்த  முயற்சி சாத்தியமாவது கேள்விக்குறியாகவே இருக்கும். 

எனவே ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்துவது எமது நோக்கமல்ல. எதிர்காலத்தில் சுதந்திர கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்து உள்ளளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியை வெற்றியடைய செய்யவே நாம் முயற்சிக்க வேண்டும்.

அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அண்மையில் சு.க.வின் வெற்றிக்கு மஹிந்தவின் ஆதரவு வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது தான் சுதந்திர கட்சியை கைவிடப்போவதில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் தேர்தலில் எம்முடன் கைகோர்ப்பார் என எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.