இலங்கையின் மோட்டார் விளையாட்டு நாட்காட்டியில் முக்கிய ஒரு நிகழ்வாக அமையும் வகையில் ‘‘Jeep போட்டி’ TSD ஓட்டப்பந்தய சுற்றுப்போட்டி 2016 இனை இலங்கை பந்தய வாகன ஓட்டுனர்கள் மற்றும் பைக் ஓட்டிகள் சங்கம் (SLARDAR) மற்றும் கொழும்பு மோட்டார் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், நாட்டில் முதன்முறையாக கடினமான தரையில் இடம்பெறுகின்ற ஓட்டப்பந்தயத்தின் மூலமாக நாடெங்கிலுமுள்ள திறமைவாய்ந்த ஓட்டுனர்கள் இப்பாரிய விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர். 

ஒட்டுமொத்த நிகழ்விற்கான பிரதான அனுசரணை வழங்கும் DIMO உடன் கைகோர்த்துள்ளதையிட்டு SLARDAR பெருமை கொள்கின்றது.   மூன்று பிரிவுகளாக இடம்பெறும் இரவு நேர ஓட்டப்பந்தயங்கள் அடங்கியுள்ள இச்சுற்றுப்போட்டியானது பின்வரும் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.  பெப்ரவரி 19 முதல் 21 வரை அண்ணளவாக 1000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள SLARDAR 1000, ஜுன் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் அண்ணளவாக 400 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள Colombo Rally Challenge இன் முதல் சுற்று மற்றும் இந்த ஆண்டு ஒக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் 400 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள Colombo Rally Challenge இன் இரண்டாவது சுற்று ஆகியன இதில் அடங்கியுள்ளன.  

SLARDAR இன் தலைவரான நிஷின் வாசலதந்திரி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்

“இப் போட்டிகள் இலங்கையில் இடம்பெறவுள்ள மிகவும் கடினமான, சவால்மிக்க மோட்டார் ஓட்டப் போட்டிகளுள் ஒன்றாக அமைந்துள்ளதுடன், மூடுபனி நிறைந்த மலைநாடு, யானைகள் உலாவரும் காடுகள் மற்றும் வேகமான கிறவல் பாதைகள் ஆகியவற்றைக் கடக்கும் வகையில் பந்தய வீதிகள் மற்றும் தடங்கள் 1800 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளடக்கப்பட்டு, மனிதனும், மோட்டார் இயந்திரமும் சோதனைமிக்க சவாலை எதிர்கொள்ளும் வகையில் அவர்களை இதில் கலந்து கொள்ளச் செய்யவுள்ளது.”

சுதந்திரமும், வலுவும் உட்பொதிந்த சாகசம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட Jeep சவாரி தீவிரமான Jeep ஆர்வலர்களுக்கு அமெரிக்க பிரபல தயாரிப்புக்களின் ஆற்றல்களை அனுபவித்து, வெளிக்கொணர இடமளிக்கின்றது. Jeep மற்றும் இந்த நிகழ்விற்கு DIMO அனுசரணை வழங்குவது தொடர்பில் குறிப்பிட்ட திரு. ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் - DIMO) அவர்கள் “முதன்முறையாக இடம்பெறுகின்ற துநநி பந்தய சுற்றுப்போட்டி 2016 நிகழ்வின் பங்காளராக விளங்குவதையிட்டு Jeep பெருமை கொள்கின்றது. இந்த சவால்மிக்க நிகழ்வானது Jeep இன் பிரதான பண்புகளை வெளிக்கொணர்வதுடன், கடினமான தரைகளில் வாகனத்தை ஓட்டுவதில் தீவிர உணர்வு கொண்டவர்களுக்கு மனிதன் மற்றும் இயந்திரத்தின் ஆற்றலை சோதிக்கும் ஒரு களமாக அமையும்.”  

ஓட்டுனரின் நம்பிக்கை மற்றும் ஆற்றல், இயந்திரத் தீர்வுடன் இணைந்து திசை வழிகாட்டலின் உதவியுடன் சுற்றுப்போட்டியில் வெற்றியை ஈட்டுவதற்கு அத்தியாவசியமாக அமையும். இப்போட்டியின் வெற்றியாளர் தேசிய மட்டத்தில் இனங்காணல் அங்கீகாரத்தை சம்பாதிக்கவுள்ளதுடன், TSD பந்தயச் சுற்றுப்போட்டியில் வெற்றிபெறுவது என்பது வெற்றியாளருக்கு ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்ற அந்தஸ்தை ஈட்டித்தருவதுடன், சிறந்த வழிகாட்டி என்ற பெயரையும் ஈட்டித்தரும். உறுதியான விருப்புடைய, உடல்,உள ரீதியாக திடமான போட்டியாளர்களுக்கு இது சவால்மிக்க ஒரு களமாக அமையும்.   

“JEEP-WRANGLER” - SLARDAR 1000 பந்தயம் DIMO 800 காட்சியறையின் முன்னால் ஆரம்பிக்கவுள்ளதுடன், பி.ப 7.02 இற்கு முதலாவது கார் தனது பந்தயத்தை ஆரம்பிக்கும். அண்ணளவாக 4 ½ மணித்தியாலங்கள் ஓட்டவுள்ள அவர்கள் குருணாகலில் 1 ½ மணி நேர ஓய்வை எடுத்துக் கொள்வர். குருணாகலில் இருந்து புறப்பட்டு, 5 மணித்தியாலங்கள் ஓட்டி, கிட்டத்தட்ட மு.ப 6.00 மணிக்கு அவர்கள் கண்டியை வந்தடைவர். 

மூன்றாவது கட்டமாக கண்டியில் KCC வாகனத் தரிப்பிடத்தில் பி.ப 4.00 மணிக்கு பந்தயத்தை ஆரம்பித்து, 4 ½ மணித்தியாலங்களாக ஓட்டி, மீண்டும் கண்டியை வந்தடைவர். கண்டியில் 2 மணி நேர ஓய்வை எடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள், நான்காவது கட்டத்தில் இரத்தினபுரி அல்லது அவிசாவளையை நோக்கிப் புறப்பட்டு மேலும் 4 ½ மணித்தியாலங்கள் ஓட்டுவர். 

ஐந்தாவதும், இறுதியுமான சுற்று அவிசாவளை அல்லது இரத்தினபுரியில் இருந்து ஆரம்பித்து, பெப்ரவரி 21 ஆம் திகதியன்று மு.ப. 7.00 மணியளவில் DIMO 800 காட்சியறையை வந்தடையும். SLARDAR 1000 விருதுகள் வழங்கும் நிகழ்வானது, வளாகத்தில் மு.ப. 11.00 மணியளவில் இடம்பெறும். சுற்றுப்போட்டி விருதுகள் நிகழ்வு Sri Lanka Super Series விருதுகள் இரவுடன் இணைந்ததாக 2016, நவம்பர் 26 அன்று இரத்மலானை ஈகிள்ஸ் லேக் சைட் மண்டபத்தில் இடம்பெறும்.